50-வது நாளாக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் - வேளாண் சட்ட நகல்களை எரித்து போகி கொண்டாட்டம்
Jan 13 2021 4:45PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், வேளாண் சட்ட நகல்களை எரித்து போகிப்பண்டிகையை கொண்டாடினர்.
வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி, 50-வது நாளாக டெல்லி - உத்தரபிரதேச எல்லையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான விவசாயிகள், கனமழையும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 8 கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதனிடையே வேளாண் சட்டங்களுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து நேற்று உத்தரவிட்டது. விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த 4 பேர் கொண்ட குழு அமைத்ததோடு, 2 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய அக்குழுவுக்கு உத்தரவிட்டது.
ஆனால், எந்தக்குழுவுடனும் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இல்லை என்றும், வேளாண் சட்டங்களை முழுமையாக திரும்பப்பெறும் வரை போராட்டம் தொடரும் என்றும் விவசாயிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர். தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் அறுவடைத்திருநாளான பொங்கலையொட்டி, இன்று போகிப்பண்டிகை கொண்டாடப்பட்டது. சிங்கு பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், வேளாண் சட்ட நகல்களை எரித்து போகிப் பண்டிகையை கொண்டாடினர். மேலும் மனித சங்கிலி போராட்டம் நடத்தியும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.