சிபிஐ மூலம் குழப்பத்தை ஏற்படுத்தி ஆட்சியை கவிழ்க்க பா.ஜ.க முயற்சி : மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு
Feb 4 2019 1:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மக்களவை தேர்தல் நெருங்கும் நேரத்தில், சிபிஐ மூலம் குழப்பத்தை ஏற்படுத்தி, மாநிலத்தில் ஆட்சியை கவிழ்க்க பா.ஜ.க, முயற்சிக்கிறது என்று மேற்கு வங்க முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.
சாரதா நிதி நிறுவன மோசடி மற்றும் ரோஸ் வேலி ஆகிய வழக்குகளில் கொல்கத்தா காவல் ஆணையர் திரு.ராஜீவ் குமாரை விசாரிக்க கொல்கத்தாவில் உள்ள அவரது இல்லத்திற்கு சி.பி.ஐ அதிகாரிகள் நேற்று சென்றனர். அங்கு, சி.பி.ஐ அதிகாரிகளை கொல்கத்தா போலீசார் தடுத்து நிறுத்தி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர், சி.பி.ஐ அதிகாரிகள் விடுவிக்கப்பட்டனர்.
இதனையடுத்து, காவல் ஆணையர் திரு.ராஜீவ் குமார் வீட்டில் ஆலோசனை நடத்திய முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜி, கூட்டாட்சி முறையை பாதுகாக்க வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தார். உடனடியாக, கொல்கத்தா மெட்ரோ சாலைப் பகுதியில், "அரசியலமைப்பை காப்போம்" என்ற முழக்கத்துடன் தர்ணாவையும் தொடங்கினார். அவருடன் கொல்கத்தா காவல் ஆணையர் திரு.ராஜீவ் குமார் உள்ளிட்டோர் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய செல்வி மம்தா பானர்ஜி,
மோடி அரசு மேற்கு வங்கத்தில் அராஜகத்தை பரப்புகிறது என்றும், மக்களவை தேர்தல் நெருங்கும் நேரத்தில், சிபிஐ மூலம் குழப்பத்தை ஏற்படுத்தி, மாநிலத்தில் ஆட்சியை கவிழ்க்க பா.ஜ.க, முயற்சிக்கிறது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.