மகா சிவராத்திரியையொட்டி சிவாலயங்களில் விடியவிடிய சிறப்பு வழிபாடு : லட்சக்கணக்கானோர் திரண்டு, பக்திப் பெருக்குடன் சுவாமி தரிசனம்

Feb 22 2020 2:48PM
எழுத்தின் அளவு: அ + அ -
மகா சிவராத்திரியையொட்டி, சிவாலயங்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில், லட்சக்கணக்கானோர், பக்திப் பெருக்குடன், சிவபெருமானை தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உள்ள லிங்கோத்பவ மூர்த்திக்கு, சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து தாழம்பூவை வைத்து சிறப்பு தீப ஆராதனை நடைபெற்றது. சிவராத்திரி விழாவில் வெளிநாட்டில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அண்ணாமலையாரை தரிசனம் செய்து வழிபட்டனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இரவு முழுவதும் நீண்ட வரிசையில் காத்திருந்து அண்ணாமலையாரை தரிசித்தனர்.

பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமாக விளங்கும் திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் ஆலயத்தில், சிவனடியார்கள், ஓதுவார்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் தரிசனம் செய்தனர். நாட்டிய குழுவினரின் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சிகளும் சிறப்புடன் அரங்கேறியது. திருவானைக்காவல் சிவாலயத்தில் விடியவிடிய சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில், சுவாமி, அம்மன் மற்றும் உற்சவருக்கு, இரவு 10 மணிக்கு தொடங்கி, விடிய விடிய 4 கால பூஜைகள் நடத்தப்பட்டது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் மாவட்டத்தின் முக்கிய சிவாலயங்களான, இன்மையில் நன்மை தருவார் கோயில், முக்தீஸ்வரர் கோயில், திருவாப்புடையார் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் வழிபாடு நடைபெற்றது.

திருப்பூர் அருகே ஊத்துக்குளியில் உள்ள பழமையான அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் சிவராத்திரி விழா, வெகுவிமரிசையாக நடைபெற்றது. சிவராத்திரியை முன்னிட்டு பரதநாட்டியம் நிகழ்ச்சி நடைபெற்றது. சிவனடியார்கள் பன்னிரு திருமுறைகளை இசைத்து பாராயணம் நிகழ்ச்சியும், தொடர்ந்து கைலாசநாதருக்கு மகா அபிஷேகமும், மாகா தீபாராதனையும் நடைபெற்றது.

நாகையில் சட்டையப்பர் கோயிலில், சிவனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு மகர தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பரத நாட்டிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. நாகை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாட்டில் ஈடுபட்டனர்.

திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் மகா சிவராத்திரியையொட்டி, நடன கலைஞர்கள் விடியவிடிய சமர்ப்பணம் செய்த நாட்டியாஞ்சலி விழா, விமர்சையாக நடைபெற்றது. தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மும்பை ஆகிய பிற மாநிலங்களில் இருந்தும் அமெரிக்கா, இலங்கை . ஆஸ்திரேலியா ஆகிய வெளிநாடுகளில் இருந்தும் வந்திருந்த நாட்டிய கலைஞர்கள், தத்தம் பகுதிகளின் பிரபல நாட்டியங்களை அரங்கேற்றினர். இதேபோன்று திருத்துறைப்பூண்டி ஸ்ரீபிறவி மருந்தீஸ்வரர் சிவாலயத்திலும் விடியவிடிய நாட்டியாஞ்சலி நடைபெற்றது.

திருவெற்றியூர் தியாகராஜசுவாமி வடிவுடையம்மன் திருக்கோயிலில், திருஒற்றீஸ்வரருக்கு நடைபெற்ற சிவராத்திரி பூஜையில், ஆயிரக்கணக்கானோர் திரண்டதால், கோவில் முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. சிவனடியார்கள் சங்கநாதம் ஒலித்து, சிவ புராணம் பாடி, இரவு முழுவதும் ஆராதனை செய்தனர்.

ராசிபுரம் ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில், மகா சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக வழிபாடுகள் நடத்தப்பட்டன. பக்தர்கள் தொடர்ந்து கோயிலை நள்ளிரவு வரை சுற்றி வலம் வந்தனர். பெண்கள் நெய் விளக்கு ஏற்றி வைத்து வழிபாடு நடத்தினர். இதேபோல் நாமக்கல் ஏகாம்பரேஸ்வரர் கோயில், ராசிபுரம் அருகேயுள்ள மூணுசாவடி ஆவடையப்பர் கோயில், ஆகிய சிவாலயங்களில் சிவாராத்திரி வழிபாடுகள் நடைபெற்றன.

கும்பகோணம் ஆதிகும்பபேஸ்வரர் கோயிலில், மகா சிவராத்திரியையொட்டி, நாட்டியாஞ்சலி விழா நடைபெற்றது. நாகேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற நாட்டியாஞ்சலியில், பள்ளி மாணவிகளின் பரத நாட்டியம் அரங்கேறியது.

கன்னியாகுமரி மாவட்டம் களியங்காடு சிவன் கோயிலில், விடிய விடிய பூஜைகள் நடைபெற்றது. குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். இரவு மட்டும், நான்கு கால சிறப்பு பூஜைகளில் பெண்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். இதேபோன்று, மாவட்டம் முழுவதும் உள்ள 12 சிவாலயங்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

தூத்துக்குடியில் மஹாசிவராத்திரியினை முன்னிட்டு, சிவன் கோயிலில் 5 கால பூஜை நடைபெற்றது. 216 சிவலிங்கங்களை வைத்து சுமங்கலி பெண்கள் பூஜை செய்ததுடன் திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும், விடிய விடிய கலை நிகழ்சிகளும் நடந்தன.

தென்மாவட்டங்களில் புகழ்பெற்ற நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோவில் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடைபெற்றது. விடிய விடிய சுவாமிக்கும் அம்பாளுக்கும் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. அதன் பிறகு சுவாமி அம்பாள் வீதி உலாவும் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திரைப்பட நடிகர் தனுஷ் தனது குடும்பத்தோடு சாமி தரிசனம் மேற்கொண்டார்.

மகா சிவராத்திரியை முன்னிட்டு தமிழகத்தில் சிவாலயங்களில், சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாரதனைகள் நடைபெற்றன. உலக பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் திருகோயிலில், இரவு முழுவதும் கோயில் நடை திறந்திருந்தது. சிவ சிவ என்ற மந்திரம் முழங்க, சிவலிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

நாகை மாவட்டம் திருவெண்காடு பிரம்மவித்யாம்பிகை சமேத. ஸ்ரீசுவேதரண்யேஸ்வரர் ஆலயத்தில், நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. இதனை திரளான பக்தர்கள் கண்டு ரசித்தனர்.

மகா சிவராத்திரியையொட்டி, திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்‍கோயிலில், லட்ச தீபம் ஏற்ற அனுமதி மறுக்‍கப்பட்டதால், பக்‍தர்கள் சோகமடைந்தனர். மகா சிவராத்திரி விழாவில், பக்‍தர்கள், இக்‍கோயிலில் அனைத்து இடங்களிலும் தீபங்கள் ஏற்றியும், உப்புகளில் சாமி உருவங்கள் வரைந்தும் வழிபடுவது வழக்‍கம். ஆனால், கோயில் நிர்வாகம், லட்ச தீபம் ஏற்றுவதற்கும், சாமி உருவங்கள் வரைவதற்கும் தடை விதித்தது, பக்‍தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் மகா சிவராத்திரியையொட்டி சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. நடராஜருக்கு பால், பன்னீர், இளநீர், விபூதி, தேன், சந்தனம், மஞ்சள், வாசனை திரவியங்கள் கொண்டு, சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்‍தர்கள் வந்திருந்து சிவபெருமானை வழிபட்டனர்.

புதுச்சேரி மாநிலம் கருவடிக்குப்பம் குருசித்தானந்தா கோயிலில், சிவபெருமானை ஏராளமான மக்கள் வழிபட்டனர். சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு, பிரார்த்தனை நடைபெற்றது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்தில் லிங்கோத்பவ மூர்த்திக்‍கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாரதனைகள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து சிவபெருமானுக்‍கு தாழம் பூவைக்‍ கொண்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஆண்டுக்‍கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் இந்த நிகழ்வில், ஏராளமான பக்‍தர்கள் கலந்து கொண்டு, அரோகரா கோஷமிட்டு வழிபட்டனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை திரௌபதி அம்மன் ஆலயத்தில், நடைபெற்ற பூக்குழி இறங்கும் வைபவத்தில், திரளான பக்‍தர்கள் கலந்து கொண்டனர். கோயிலில் இருந்து கரகம் எடுத்து வந்த பக்‍தர்கள், ஊரின் முக்கிய வீதி வழியாக உலா வந்து, பூக்குழியில் இறங்கி அம்மனை வழிபட்டனர்.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுகுன்றம் அருகே அமைந்துள்ள அகிலாண்டேஸ்வரி உடனுறை கைலாசநாதா் ஆலயத்தில், மூலவருக்‍கு பன்னீர், வில்வம், சந்தனம் உள்ளிட்டவைகள் கொண்டு, அபிஷேகம் நடைபெற்றது. திரளான பக்‍தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் சுவாமியை தரிசனம் செய்தனர்.

திருப்பூரை அடுத்த தாராபுரம் அகஸ்தீஸ்வரர் கோயிலில், ஆயிரத்தெட்டு சிவலிங்கங்கள் பக்‍தர்களால் பூஜிக்‍கப்பட்டன. அமராவதி ஆற்றின் கரையோரம், ஆற்று மணலால் அகத்திய முனிவர் பிரதிஷ்டை செய்ததாக கூறப்படும் சிவபெருமானை, திரளான பக்‍தர்கள் கூடி வழிபட்டனர்.

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோயிலில், பர்வதவர்த்தினி அம்பாள் வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்‍தர்களுக்‍கு காட்சி அளித்தார். திருத்தேரை பக்‍தர்கள் வடம் பிடித்து இழுக்‍க, நான்கு ரத வீதிகளில் தேர் உலா வந்தது.

திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயல் மாசிலாமணீஸ்வரர் ஆலயத்தில், சிவராத்திரியை முன்னிட்டு பக்‍தர்கள் சிவபுராணம் பாடி, வழிபாடு நடத்தினர். பள்ளி மாணவிகள் அரங்கேற்றிய பரத நாட்டிய நிகழ்ச்சியை, ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00