பங்குனி உத்திர திருவிழா : லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு நேர்த்திக் கடன் செலுத்தி சிறப்பு வழிபாடு

Mar 22 2019 12:11PM
எழுத்தின் அளவு: அ + அ -

பங்குனி உத்திர திருவிழா முக்‍கிய திருத்தலங்களில் விமரிசையாக நடைபெற்றது. இதில் லட்சக்‍கணக்‍கான பக்‍தர்கள் கலந்துகொண்டு நேர்த்திக்‍ கடன் செலுத்தியதுடன் சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர்.

நாகை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயிலில், பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, நரி ஓட்டம் எனும் யானை ஓட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. பங்குனி உத்திரத்தின்போது, சுவாமிகள் வீதியுலா செல்லும் வரை அமைதியாக நிற்கும் யானை, முருகப்பெருமான் மயில் வாகனத்தில் எழுந்தருளும்போது அதிவேகமாக ஓடியபடியே சப்தம் எழுப்பியவாறு முருகனை வணங்கும். இந்நிகழ்வினைக்‍ காண பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் வந்திருந்தனர்.

சீர்காழியை அடுத்த திருநகரி கிராமத்தில் ஸ்ரீ அமிர்தவல்லி தாயார் சமேத கல்யாண ரெங்கநாதர் கோயிலில், பங்குனி திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பெருமாள் தேரையும், தொடர்ந்து ஆழ்வாரின் தேரையும் வடம் பிடித்து இழுத்தனர்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அசனாம்பிகை அம்மன் உடனுறை வைத்தியநாத சுவாமி ஆலய பங்குனி உத்திர பெருவிழாவின் 9-ம் நாள் நிகழ்ச்சியில், திருத்தேர் திருவிழா நடைபெற்றது. விநாயகர், சுவாமி, அம்பாள் தனித்தனியாக தேர்களில் எழுந்தருளி, நான்கு ரதவீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

கடலூர் மாவட்டம் நெய்வேலி வேலுடையான் பட்டு பகுதியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில், பங்குனி உத்திர விழாவில், திருத்தேர் நிகழ்ச்சியை அடுத்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு காவடி, பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

திருப்பூரை அடுத்த கருவலூரில், மாரியம்மன் கோயில் தேரோட்ட விழாவில், ஆயிரக்கணக்கானோர் திருத்தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர். இதன் தொடர்ச்சியாக நாளை பரிவேட்டை, குதிரை வாகனக்காட்சி, தெப்போற்சவம், காமதேனு வாகன காட்சியும், நாளை மறுநாள் அம்மன் தரிசன காட்சியும் நடைபெறவுள்ளது.

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சேர்த்தி சேவை நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. நம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து தங்கப்பல்லக்கில் புறப்பட்டு திருச்சுற்று வழியாக தாயார் சன்னதியை வந்தடைந்தார். அங்கு ரெங்கநாதர், தான் அணிந்திருந்த மோதிரத்தை நாச்சியாருக்கு அன்பளிப்பாக அளித்ததையடுத்து, தாயாருக்கும், நம்பெருமாளுக்கும் இடையேயான சண்டை நம்மாழ்வாரால் தீர்க்கப்பட்டு சமாதானமடைந்து ஏற்றுக்கொள்ளும் நிகழ்ச்சியை ஏராளமான பக்‍தர்கள் கண்டு வியந்தனர்.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள குமுளூரில், ஸ்ரீ பாலதண்டாயுதபாணி ஆலய பங்குனி உத்திரத் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். இத்தேரோட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வாலிகண்டபுரம் கிராமத்தில் உள்ள வாலாம்பிகை சமேத வாலீஸ்வரர் திருக்கோவில் பங்குனி உத்திர பெருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. பக்தர்கள், பால் காவடி, மயில் காவடி உள்ளிட்டவைகளை ஊர்வலமாக எடுத்து வந்து முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜை மேற்கொண்டனர்.

அரியலூர் மாவட்டம் கள்ளூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீபாலதண்டாயுதபாணி திருக்கோயிலில், பங்குனி உத்திர திருவிழாவையொட்டி, பால்குடம், பால்காவடி, அலகு குத்தியபடி ஊர்வலமாக வந்த பக்‍தர்கள், ஸ்ரீ பாலதண்டாயுதபாணிக்கு பாலாபிஷேகம் செய்தனர். தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனியில், பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு, முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் நடைபெற்றது. நான்கு கிரிவீதியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

தஞ்சையில் பிரசித்தி பெற்ற அங்காள ஈஸ்வரி முனீஸ்வரர் ஆலயத்தில் 54 ஆம் ஆண்டு பங்குனி உத்திர தீமிதி திருவிழா நடைபெற்றது. விரதம் இருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்‍தர்கள், பூக்குழி இறங்கி தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர். ஏராளமானோர் தங்கள் குழந்தைகளையும் தோளில் சுமந்தபடி பூக்குழி இறங்கினார்கள்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள ஸ்ரீ பழனியாண்டி திருக்கோவிலில் நடைபெற்ற பூக்குழி திருவிழாவில், நூற்றுக்‍கும் மேற்பட்டோர் தங்கள் குழந்தைகளை தூக்கியபடி, பூக்‍குழியில் இறங்கி நேர்த்திகடனை செலுத்தினர். இதனை கண்டுகளிக்க அருகில் உள்ள கிராமங்களில் இருந்து 5 ஆயிரத்துக்‍கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி காலாப்பட்டு பகுதியில் உள்ள பாலமுருகன் கோயிலின் பங்குனி உத்திர செடல் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தங்களது உடலில் அலகு குத்திக்கொண்டு கிரேன், பொக்லைனில் தொங்கியபடியும், வாகனங்களை இழுத்தும் நேர்த்தி கடன் செலுத்தினர். புதுச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00