திருகார்த்திகை திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம் : ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
Dec 1 2019 5:15PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் மிக முக்கியமானது திருக்கார்த்திகை தீபத் திருவிழாவாகும். 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் தமிழகம் மட்டும் இன்றி வெளி மாநிலம் மற்றும் வெளிநாட்டில் 25 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.தீபத்திருவிழா கொடியேற்றத்தினை முன்னிட்டு இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகள் கொடி மரம் அருகே எழுந்தருளினர். சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என முழக்கமிட கோவிலின் முன்புள்ள 64 அடி உயரம் கொண்ட தங்க கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது. வரும் 10ம் தேதி அதிகாலை அண்ணாமலையார் கருவறை முன்பாக பரணி தீபமும், மாலை 6 மணிக்கு கோயிலின் பின்புறம் உள்ள 2668 அடி உயரமுள்ள மலை மீது மகா தீபம் ஏற்றப்படும்.