ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதிபோட்டியில் 50 ரன்களில் சுருண்ட இலங்கை அணி - வெறும் 6.1 ஓவர்களில் இலக்கை எட்டி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி
Sep 18 2023 6:42AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆசியக் கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி இந்திய அணி 8-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இந்திய - இலங்கை அணிகள் மோதிய ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டி, இலங்கை தலைநகர் கொழும்புவில் நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக பத்தும் நிசங்காவும், குசால் பெரேராவும் களமிறங்கினர். முதல் ஓவரை அற்புதமாக வீசிய இந்திய அணியின் நம்பிக்கை நாயகன் பும்ரா, தனது 3-வது பந்தில் குசால் பெரேராவை டக் அவுட்டாக்கி வெளியேற்றினார். தனது அதிரடி பந்து வீச்சால் இலங்கை பேட்ஸ்மேன்களை திணறடித்த முகமது சிராஜ், இலங்கை அணியை நிலைகுலைய வைத்தார்.
இந்திய வீரர்களின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் மளமளவென விக்கெட்டுகளை இழந்த இலங்கை அணி, 15 புள்ளி 2 ஓவரில் 50 ரன்களில் சுருண்டது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 6 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர்.
இதனையடுத்து 51 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க வீரராக சுப்மன் கில்லுடன் இணைந்த இஷான் கிஷன் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். குறைந்த பட்சம் 3 விக்கெட்டுகளையாவது எடுத்துவிடலாம் என நினைத்த இலங்கை அணியின் கனவை, இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் தவிடுபொடியாக்கினர். இஷான் கிஷன் 3 பவுண்டரிகளில் 18 பந்தில் 23 ரன்கள் எடுத்தார். சுப்மன் கில் 19 பந்தில் 27 ரன்கள் சேர்க்க, 6.1-வது ஓவரில் வெற்றி இலக்கை எட்டி 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 8-வது முறையாக இந்திய அணி ஆசிய கோப்பையை வென்று அசத்தியுள்ளது.