நெல்லை மாவட்டத்தில் 600க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது - தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்பு பணியில் தீவிரம்
Jan 13 2021 4:42PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நெல்லை மாவட்டத்தில் தொடர் மழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் இரண்டு குழுக்களாக பிரிந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பலத்த மழை காரணமாக, பாபநாசம், மணிமுத்தாறு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இரண்டு அணைகளும் நிரம்பியதால், வினாடிக்கு 32 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இந்த தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்படுவதால் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. கரையோர பகுதி மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நெல்லை சந்திப்பு, மீனாட்சிபுரம், அண்ணா நகர், கருப்பந்துறை, சேந்திமங்கலம், மணிமுத்தாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கரையோரப் பகுதியில் உள்ள வீடுகளில் வெள்ள நீர் புகுந்தது.
நெல்லை மாவட்டத்தில் 600-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. மீனாட்சிபுரத்தில் 2 வீடுகள் இடிந்தன. இந்நிலையில், அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவைச் சேர்ந்த 50 வீரர்கள், நெல்லை மாவட்டத்திற்கு வந்துள்ளனர். இவர்களில் தலா 25 பேர் இரண்டாகப் பிரிந்து ஒரு குழுவினர் பாபநாசம் அருகிலுள்ள விக்கிரமசிங்கபுரத்திற்கும், மற்றொரு குழுவினர் நெல்லை மாநகர பகுதிகளிலும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.