தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. ஏராளமான பக்தர்கள் விநாயகர் கோயில்களில் குவிந்து நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
விநாயகர் சதுர்த்தியையொட்டி, திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி திருக்கோவிலில் உச்சிப் பிள்ளையார் மற்றும் மாணிக்க விநாயகருக்கு 50 கிலோ பச்சரிசி, 50 கிலோ வெல்லம், 100 தேங்காய் உள்ளிட்டவைகளைக் கொண்டு தலா 75 கிலோ எடையிலான 150 கிலோவில் பிரம்மாண்ட கொழுக்கட்டை, மேளதாளங்கள் முழங்க தொட்டில் கட்டி எடுத்து வரப்பட்டது. பின்னர் விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று, கொழுக்கட்டை நெய்வேத்தியம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று விநாயகரை வழிபட்டுச் சென்றனர்.
வசிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் ஆலயத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் ஸ்ரீ கற்பக விநாயகரை தரிசனம் செய்து வருகின்றனர். பிள்ளையார்பட்டியில் நாளை விநாயகர் சதுர்த்தி விழாவும் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இதையொட்டி இன்று மாலை கற்பக விநாயகர் சந்தன காப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கும் நிகழ்வும், தொடர்ந்து தேரோட்டமும் நடைபெற உள்ளதால், 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
புதுச்சேரியில் மிகவும் பிரசித்திபெற்ற ஸ்ரீ மணக்குள விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு மூலவர் மற்றும் உற்சவருக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து கலசாபிஷேகம் செய்யப்பட்டு மூலவருக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டும், உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது.
சேலம் செவ்வாய்பேட்டை ஸ்ரீ வாசவி கல்யாண மண்டபத்தில் தென்னந்தோப்புகள் அமைக்கப்பட்டு, 14 அடியில் செயற்கை தேங்காய் உருவாக்கப்பட்டு தேங்காய் உள்ளே விநாயகர் காட்சி தருவதைப் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்ற நிலையில், ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தேங்காயின் உள்ளே எழுந்தருளிய பிள்ளையாரை வியப்புடன் பார்த்து தரிசனம் செய்து சென்றனர்.
கோவை புலியகுளத்தில் உள்ள உலக புகழ் பெற்ற 19 அடி உயரம் மற்றும் 190 டன் எடை கொண்ட ஆசிய கண்டத்திலேயே மிகப் பெரிய முந்தி விநாயகர் சிலைக்கு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கணபதி ஹோமம், சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகம் செய்யப்பட்டது. ராஜ அலங்காரத்தில் காட்சியளிக்கும் பிள்ளையாரைக் கோவை மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் வழிபாடு செய்து பிரசாதம் பெற்றுச் சென்றனர்.
விநாயகர் சதுர்த்தியை ஒட்டி நெல்லை உச்சிஷ்ட விநாயகர் திருக்கோவிலில்
விநாயகருக்கு சிறப்பு அபிஷேகமும் தீபாராதனையும் நடைபெற்றது. பிறகு கோவிலில் இருந்து விநாயகர் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரி மேற்கொள்ளப்பட்டு, பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து விநாயகர் கோவிலில் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.