மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில், போராட்டம் நடத்தியவர்கள் மீது தடியடி - 10 பேரை கைது செய்து காவல்துறை அராஜகம்
Dec 2 2019 8:47PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்த விவகாரத்தில், உடல்களை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தி காவல்துறையினர் அராஜகத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகேயுள்ள நடூர் பகுதியில், சிவசுப்பிரமணியன் என்பவர், அவரது வீட்டை சுற்றிலும் கருங்கற்களால் ஆன 20 அடி உயர காம்பவுண்ட் சுவரை கட்டியுள்ளார். மழை நீர் தேங்கியதால் இந்த சுவரின் ஒரு பகுதி இடிந்து அருகில் உள்ள 4 வீடுகளின் மீது விழுந்தது. இதனால் அந்த சிறிய வீடுகள் இடிந்து சிதைந்தது.இந்த வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த 10 பெண்கள், இரு குழந்தைகள், 3 ஆண்கள் உள்பட 17 பேர் மண்ணில் புதைந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
இவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. வீடுகள் இடிந்து விழுந்ததற்கு பக்கத்து கட்டடத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததது தான் காரணம் என்றும் அந்த கட்டடத்தின் உரிமையாளரை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி, உயிரிழந்தவர்களின் உறவினர்களும், அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இறந்தவர்களின் உடல்களை வாங்க மறுத்து, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை அருகே போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது காவல்துறையினர் கண்மூடித்தனமாக தடியடி நடத்தினர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில், 10 க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.
இதனிடையே, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், கோவை வடக்கு மாவட்ட கழக செயலாளர், திரு.அலாவுதீன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.