தமிழகத்தின் பல்வேறு ஆலயங்களில் ஆடி வெள்ளி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் திரளான பக்‍தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்

Jul 21 2018 3:53PM
எழுத்தின் அளவு: அ + அ -

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சாத்துகூடலில் உள்ள திரௌபதை அம்மன் திருக்கோவில் தீமிதி திருவிழா சிறப்பாக நடைபெற்றது. ஆடி மாதம் முதல் வெள்ளியை முன்னிட்டு நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், விருத்தாச்சலம் மணிமுத்தாறு நதிக்கரையில் இருந்து சக்திகரகம் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. அப்போது ஏராளமான பக்‍தர்கள் கையில் தீச்சட்டி ஏந்தியும், கை குழந்தைகளை சுமந்தவாறும் நேர்த்திக்‍ கடனை செலுத்தினர். மேலும், சாட்டை அடி திருவிழாவும் நடைபெற்றது.

ஆடி மாத வெள்ளியையொட்டி, கும்பகோணம் வீர சைவ மடத்தில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையில், நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று தங்கள் வாழ்வு சிறக்க பிரார்த்தனை செய்தனர். இந்த திருவிளக்கு பூஜையில் பங்கேற்ற பெண்கள், பஞ்ச முக தீப விளக்குக்கு... மஞ்சள், சந்தனம், குங்குமம், அட்சதை, மற்றும் மலர் தூவி பூஜை செய்தனர். திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டால் சகல தோஷங்களும் நீங்கி, திருமண பாக்கியம், குழந்தை செல்வம், மாங்கல்ய பலம், ஆயுள், ஆரோக்யம், முதலிய அனைத்து நலன்களும் கிடைக்கும் என்பது ஐதீகமாகும்.

விழுப்புரத்தில் உள்ள கன்னியம்மன் கோயிலில், ஆடி மாத முதல் வெள்ளியையொட்டி, நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில், 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். உடம்பில் அலகு குத்தியும், தீச்சட்டி ஏந்தியும், கரகம் சுமந்தும், விழுப்புரம் ஆஞ்சநேயர் கோயில் அருகில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்றனர். பின்னர், கன்னியம்மன் கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் இறங்கி தீ மிதித்து வழிபாடு நடத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நித்ய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளியையொட்டி, சிறப்பு பூஜை நடைபெற்றது. பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, சமயபுரம் மாரியம்மன் அலங்காரத்தில், பக்தர்களுக்கு அம்மன் அருள் பாலித்தார். இதில் சுற்று வட்டாரப் பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல், பட்டணம் தண்டு மாரியம்மன் கோவிலில் நடைபெற் திருவிளக்கு பூஜையில் திரளான பெண்களும், பக்தர்களும் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த அகஸ்தியம்பள்ளி பக்தர்குளம் மாரியம்மன் கோவில் 10 நாள் ஆடித்திருவிழா வெகுவிமரிசையுடன் தொடங்கியது. முதல் நாள் விழாவையொட்டி, வேதாரண்யேஸ்வரர் திருக்கோவிலில் இருந்து காமதேனு வாகனத்தில் மாரியம்மன் எழுந்தருளி, நாட்டியக் குதிரை ஆட்டத்துடன் பக்தர்குளம் மாரியம்மன் கோவிலை வந்தடைந்தது. இதில் பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.

ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரர் திருக்கோவிலில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையில், 200க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு, உலக நன்மைக்காவும், ஆரோக்கியத்திற்காகவும் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். வளையல், பிரசாதம், குங்குமம், திருமஞ்சனம் ஆகியவை வாரணாம்பிகை அம்மனுக்கு அலங்கரிக்‍கப்பட்ட பின்னர், மகாதீபாராதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

சுமங்கலிப் பெண்கள் மற்றும் திருமணமாகாத பெண்களுக்கு சிறப்பான பூஜை என்பதால், ஈரோடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பெண்கள், தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டு அம்மனை வணங்கி வழிபட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள புனித அல்போன்சா திருத்தல ஆலயத்தின் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. சிறப்பு பிரார்தனைகளுக்கு பின்னர் மேளதாளங்களுடன் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு பேராரயர்கள் மற்றும் அருட்பணியாளர்கள் முன்னிலையில் திரு கொடியேற்றம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆடம்பர கூட்டு திருப்பலி நடைபெற்றது. இதில் கன்னியாகுமரி மட்டுமல்லாமல், கேரளாவில் இருந்தும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதனிடையே, திருவிழாவில் ஒவ்வொரு நாளும் சிறப்பு பிரார்த்தனை, ஆடம்பர கூட்டு திருபலி, ராசாத் திருபலி, புனித அல்போன்ஷா சிறப்பு நவநாள், நற்கருணை ஆராதனை, நற்கருணை பவனி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. பத்தாவது நாளான வரும் 29-ம் தேதி, திருத்தேர் பவனி மற்றும் நேர்ச்சை விருந்துடன் ஆண்டு விழா நிறைவு பெறவுள்ளது.

புதுச்சேரியின் நைனார்மண்டபத்தில் உள்ள நாகமுத்து மாரியம்மன் கோவில் செடல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று நேர்த்திக்கடனை செலுத்தினர். இக்கோவிலின் 35-ம் ஆண்டு செடல் விழா கடந்த 12-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையடுத்து, பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்று வந்தது.

இந்நிலையில், முக்கிய நிகழ்ச்சியான செடல் உற்சவம் மற்றும் தேர்பவனி நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் அம்மன் வைக்கப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. முன்னதாக ஆயிரக்‍கணக்கான பக்தர்கள் அலகு குத்தியபடி, கார், வேன், லாரி, பேருந்து உள்ளிட்ட கனரக வாகனங்களை இழுத்து நேர்த்தி கடன் செலுத்தியது மெய்சிலிர்க்க வைத்தது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00